புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பட்ஜெட்டில்  தமிழக ரயில்வே விரிவாக்க திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுமா? எதிர்பார்ப்பில் தெற்கு ரயில்வே

2014- 2015 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. இதில், தமிழகத்தில்

News image
Updated On :7 ஜூலை 2014, 10:46 pm

2014- 2015 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. இதில், தமிழகத்தில் முடங்கி இருக்கும் ரயில்வே விரிவாக்கப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் எதிர்பார்ப்புடன் உள்ளன.

அதிலும் மிக முக்கியமாக சென்னை - கன்னியாகுமரி இடையே இரு வழிப்பாதை திட்டத்துக்கான நிதி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.  மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு 2014 - 2015 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பல புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும்,  தமிழக ரயில்வே விரிவாக்கப் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.  இதனால் இருவழிப்பாதை, அகலப்பாதை திட்டப் பணிகள் நடைபெறாமல் முடங்கின.

இம்முறை மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால் தமிழக ரயில் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படும் என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அதற்கான கோரிக்கைகளும் தெற்கு ரயில்வே சார்பில் மத்திய அரசிடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் இரு வழிப்பாதை திட்டம் : சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரு வழி அகலப்பாதை மட்டுமே உள்ளது. இதை இருவழிப் பாதையாக மாற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு கடந்த பட்ஜட்டில் எந்தவித தீர்வும் சொல்லப்படவில்லை.

இந்தத் திட்டத்துக்கான நிதி மற்றும் கால வரைவும் கடந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படாதது தென் மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதனால் ரயில் போக்குவரத்துக்கு குறைந்தபட்சம் இரு தனித்தனி ரயில் பாதைகள் தேவை என்று அறியப்பட்டது.

முழுமையடையாத பணி: சென்னையிலிருந்து நாகர்கோவில் வரையிலான வழித்தடத்தில் இருவழிப்பாதை அமைக்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

செங்கல்பட்டு முதல் திண்டுக்கல் வரையிலான வழித்தடத்தில், இப்போது சென்னை முதல் தாம்பரம் வரை நான்கு வழிப்பாதையும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை இரண்டு வழிப்பாதையும் உள்ளன. அதேபோல் திண்டுக்கல் முதல் மதுரை வரை இருவழிப்பாதை உள்ளது. இடைப்பட்ட நிலையில் செங்கல்பட்டு முதல் திண்டுக்கல் வரையிலான வழித்தடத்தில் ஒருவழிப்பாதைதான் இருக்கிறது.

5 ஆண்டுகளாக முடக்கம்: சென்னை முதல் விழுப்புரம் வரையிலான 103 கிலோ மீட்டர் வழித்தடத்தில் இரட்டைப்பாதை அமைக்கும் திட்டம் 2009 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் செங்கல்பட்டு முதல் தொழுப்பேடு வரையிலான இரட்டைப்பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தொழுப்பேடு முதல் பேரணி வரையிலான பணிகள் இன்னமும் முடியாததால் செங்கல்பட்டு, விழுப்புரம் இரட்டைப்பாதைத் திட்டம் முழுமையடையாமல் இருக்கிறது.

தென் மாவட்டங்களுக்கும் ப்ரீமியம் ரயில்
நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு ப்ரீமியம் எக்ஸ்பிரஸ் ரயில் அறிவிக்கப்பட வேண்டும்.

இந்தாண்டு கோடை காலத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு வார நாள்களில் அறிவிக்கப்பட்ட ப்ரீமியம் எக்ஸ்பிரஸ் ரயில் போதிய வரவேற்பின்மை காரணமாக சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டது. ஆனால் இதே ப்ரீமியம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வார இறுதி நாள்களில் இயக்கப்பட்டிருந்தால் வரவேற்பு கிடைத்திருக்கும். எனவே வார இறுதி நாள்களில் ப்ரீமியம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துருப்பிடித்த தண்டவாளங்கள் !
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இயக்கப்படும் ரயில்களின் தண்டவாளங்கள் துருப்பிடித்து காட்சியளிக்கிறது. இதனை பராமரிப்பதால் ரயில்வேக்கு கூடுதல் செலவாகிறது. எனவே கடலோர மாவட்டங்களில் துருப்பிடிக்காத தண்டவாளங்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பல நாடுகள் ரயில் தண்டவாளத்தில் புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிலையில், இந்திய ரயில்வே தண்டவாளங்கள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் துருப்பிடித்தே இருக்கிறது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் பட்ஜெட்டில் ரயில் தண்டவாள தொழில்நுட்பம் குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை. 100 ரயில்கள் செல்ல வேண்டிய தண்டவாளத்தில், இப்போது 150 ரயில்கள் செல்கின்றன. இதனால் தண்டவாளத்தின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்தப் பட்ஜெட்டிலாவது தண்டவாளத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்படுமா ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.